மது குடித்ததை தந்தை கண்டித்ததால் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
நாகர்கோவிலில் மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தண்டவாளத்தில் ஆண் பிணம்
நாகர்கோவில் புத்தேரி ரெயில்வே பாலம் அருகில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பிணமாக கிடந்தவரின் தலை மற்றும் உடல் சிதைந்து கிடந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
பிணமாக கிடந்தவரின் உடல் அருகே மோட்டார் சைக்கிளின் சாவி ஒன்றும் கிடந்தது. அதனால் மோட்டார் சைக்கிள் அருகில் எங்காவது நிற்கிறதா? என்று பார்த்தனர். அப்போது புத்தேரி ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது. அந்த மோட்டார் சைக்கிளை, பிணத்தின் அருகே கிடந்த சாவியால் திறந்து பார்த்தனர். உடனே மோட்டார் சைக்கிள் பூட்டு திறந்தது. எனவே அந்த மோட்டார் சைக்கிள் பிணமாக கிடந்தவரின் மோட்டார் சைக்கிள் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
ரெயில் முன்பாய்ந்து தற்கொலை
பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண் மற்றும் அதில் இருந்த ஒரு செல்போன் எண் மூலமாக விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (வயது 25) என்ற கட்டிட தொழிலாளி என்பது தெரிய வந்தது. பின்னர் அவருடைய குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை செய்ததில் ஜெனிஷ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதை அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் வேலைக்கு செல்லாமல் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் ஜெனிஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.