கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மீனவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-04 18:53 GMT
கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மீனவர்கள்  கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் புறக்கணிப்பு
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி தற்போது தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக மாற்றப்பட்டது. இதற்காக அருகில் உள்ள ஏழுதேசம் பேரூராட்சி அதனுடன் இணைக்கப்பட்டது. இதில் சில மீனவ கிராமங்களும் உள்ளன. 
கொல்லங்கோடு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தரம் உயர்த்தப்பட்ட பிறகு கொல்லங்கோடு முதன்முறையாக நகராட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் சிலர் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், தேர்தலில் யாரும் போட்டியிட போவதில்லை எனவும் அறிவித்தனர்.
மீனவர்கள் முற்றுகை
இந்த பரபரப்புக்கு இடையே தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட ஒரு வார்டுக்கு நேற்றுமுன்தினம் ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மற்ற வார்டுகளிலும் போட்டியிட மனுதாக்கல் செய்யப்பட்டது. 
இதனை அறிந்த மீனவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் நேற்று மதியம் கொல்லங்கோடு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி வெளியே செல்ல முடியவில்லை
அதிகாரிகள் சிறைபிடிப்பு
உடனே கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலரை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனை கவனித்த அவர்கள் போலீசாரின் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. அப்போது, வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரியிடம் ஒப்படைக்கப் போகிறோம். எங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  மேலும் போராட்டம் தொடர்ந்து நீடித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையே கிள்ளியூர் தாசில்தார் திருவாழி வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரையும் மீனவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு கோஷங்களை எழுப்பியதால், மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து குளச்சல் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. போராட்டக்காரர்கள் அங்கேயே முகாமிட்டு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.
சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை
பின்னர் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் கோரிக்கை மனுவை, சப்-கலெக்டர் அலர்மேல் மங்கையிடம் கொடுத்தனர். 
இந்த மனு தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 8½ மணி வரை நீடித்தது.

மேலும் செய்திகள்