சிவகங்கை, மானாமதுரை நகராட்சி தேர்தல்:காங்கிரஸ்-பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவிகள்
சிவகங்கை, மானாமதுரை நகராட்சி தேர்தலில் காங்கிரஸ்-பா.ஜனதா சார்பில் கல்லூரி மாணவிகள் போட்டியிடுகின்றனர்.
சிவகங்கை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும்.
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பிரியங்கா (வயது 22) என்பவர் வேட்பு மனு நேற்று தாக்கல் செய்தார். இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சண்முகராஜன். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர். இந்த வார்டில் கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது இந்த வார்டு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், தனது மகளை வேட்பாளராக்கி உள்ளார்.
மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்ந்து, முதன்முறையாக நகராட்சி தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் நேற்று மானாமதுரை 2-வது வார்டில் மதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவி ரஞ்சிதா (வயது 22) பா.ஜ.க சார்பில் ேபாட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.