3 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் 3 பேர் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

Update: 2022-02-04 17:59 GMT
திருப்பத்தூர்

தேர்தல் பிரசாரத்தில் 3 பேர் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் எம்.பிரதீப் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் எம்.பிரதீப் குமார் பேசியதாவது:-

3 பேர் மட்டுமே

மாவட்டத்தில் வாக்குச்சாவடி விவரங்கள், பதட்டமான வாக்குச்சாவடி விவரங்கள், வீடியோ எடுக்க வேண்டிய மையங்கள், தேர்தல் நுண் (மைக்ரோ) பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படுவது, வாக்குப்பதிவு அலுவலர் நியமனங்கள், அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளை பெறுதல், மண்டல அலுவலர்கள் நியமித்தல், வாக்குப்பதிவு பொருட்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள். தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சரியாகவும், மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் நடத்த வேண்டும்.

வாகனத்தில் தேர்தல் பிரசாரம்செய்யக்கூடாது. மூன்று நபர்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும், வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தனித்துணை கலெக்டர்  கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்