5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டெடுப்பு
பண்ருட்டி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கற்கால கற்கருவிகள் மற்றும் கீறல் குறியீடு ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கூறியதாவது:-
இங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கால கைக்கோடாரியின் நீளம் 8 செ.மீ., அகலம் 3.7 செ.மீ, மற்றொரு கருவியின் நீளம் 4 செ.மீ., அகலம் 3.5 செ.மீ. மற்ற இரண்டு கருவிகளும் உடைந்த துண்டுகளாக கிடைத்துள்ளன. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர்.
5 ஆண்டுகள் பழமையானது
மனித குலத்தின் தொன்மை வரலாற்றை பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், உலோககாலம் என வகைப்படுத்தலாம். நமக்கு கிடைத்த இக்கருவி புதிய கற்காலத்தை சேர்ந்த கைகோடாரியாகும். புதிய கற்கால கருவிகள் மனிதனின் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதியகற்கால கருவி 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். இது போன்ற புதியகற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் மாங்குடி, பையம்பள்ளி ஆகியஇடங்களில் கிடைத்துள்ளன.
வெள்ளப்பெருக்கால் சிதைந்தது
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகளில் 8 குறியீடுகளும், கருப்பு பானை ஓட்டில் ஒரு குறியீடும் பதிந்துள்ளன. இக்குறியீடு பற்றிய பொருள் தெரியவில்லை. ஆனால் ஆதிச்சநல்லூரில் கிடைத்த ஒருசில குறியீடுகள் இதனோடு ஒத்துப்போகிறது. இங்கு கிடைக்க கூடிய தொல்பொருட்களை பார்க்கும் போது இப்பகுதியில் கற்காலம் முதல் சங்ககாலம் வரை மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்தாலும் எல்லாம் வெள்ளப்பெருக்கினால் சிதைந்தே கிடைக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.