கள்ளக்குறிச்சி வடபொன்பரப்பியில் தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் வடபொன்பரப்பி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்
கள்ளக்குறிச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சங்கராபுரம், சின்னசேலம், வடக்கனந்தல், தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள 153 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்கு சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என பார்வையிட்டு அங்கிருந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அவர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரனிடம் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என கூறினார்.
பேரூராட்சி அலுவலகம்
அதேபோல் தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா அங்கிருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ், பிரபு ஆகியோரிடம் வேட்பு மனு பெறும் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் எத்தனை பேர் அனுமதிக்கப்படுகின்றனர், இதுவரை எத்தனை பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, வட்டார தேர்தல் பார்வையாளர் சிவக்கொழுந்து, பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.