கரூரில் 8-ந் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் வருகிற 8-ந் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். தொடர்ந்து வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து, தங்களது பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அந்தவகையில் கரூரில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
8-ந் தேதி கரூர்
இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கரூரில் 8-ந் தேதி பிரசாரம் செய்கிறார். அதன்படி 8-ந் தேதி மதுரை மாநகராட்சி (காலை 9 மணி), திண்டுக்கல் மாநகராட்சி (காலை 11.30 மணி), கரூர் மாநகராட்சி (மதியம் 3 மணி), திருச்சி மாநகராட்சி (மாலை 5.30 மணி) ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.