சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
சுசீந்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தகராறு
சுசீந்திரம் அக்கரை கடை கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 51). இவர், கோட்டார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரேமா ஸ்டெல்லா பாய். இவர்களுக்கு மணிஸ் எபின் என்ற மகனும் மம்தா கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.
மணிஸ் எபினுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏசுதாஸ் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிரேமா ஸ்டெல்லா பாய், மகள் மம்தா கிரேஸ் ஆகிய இரண்டு பேரும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
தற்கொலை
இந்த நிலையில் இரவு ஏசுதாஸ் வீட்டுக்கு வந்து படுக்க சென்றார். நேற்று காலையில் அவர் வீட்டில் இருந்து எழுந்து வராததால், பக்கத்து வீட்டை சேர்ந்த நாதன், எட்வின் ஆகியோர் வீட்டின் கதவை தட்டி கூப்பிட்டு பார்த்தனர். எந்த சத்தமும் இல்லாததால் வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததை பார்த்தனர். உடனே அதன் வழியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏசுதாஸ் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுபற்றி ஏசுதாசின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து அவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.