போலி சான்றிதழ் வழங்கி பணியாற்றிய திருவள்ளுவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கைது

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போலி பணி அனுபவ சான்றிதழ் வழங்கி 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த உதவி பேராசிரியரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-12 17:53 GMT
வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போலி பணி அனுபவ சான்றிதழ் வழங்கி 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த உதவி பேராசிரியரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

உதவி பேராசிரியர்

வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). விலங்கியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளார். பன்னீர்செல்வம் கடந்த 2010-ம் ஆண்டு காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை உதவிபேராசிரியராக பணியில் சேர்ந்தார். 

அப்போது அவரிடம் ஏற்கனவே பணிபுரிந்த கல்லூரிகளின் சான்றிதழை வழங்கும்படி பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை தஞ்சாவூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 2004 முதல் 2006 வரை தஞ்சாவூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் பணிபுரிந்துள்ளதாக சான்றிதழ் வழங்கினார். அதன்பின்னர் அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

போலி பணி அனுபவ சான்றிதழ்

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னீர்செல்வம் அளித்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பரிசோதிக்கப்பட்டது. அதில், அவர் ஏற்கனவே பணிபுரிந்ததாக அளித்த கல்லூரிகளின் சான்றிதழ் போலியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதையடுத்து பன்னீர்செல்வத்திடம் பல்கலைக்கழக நிர்வாகம், 2 கல்லூரிகளிலும் பணிபுரிந்த அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி தெரிவித்தது. ஆனால் அவர் அதனை பல்கலைக்கழகத்தில் வழங்கவில்லை. அதையடுத்து அவர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. 
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பன்னீர்செல்வம் 2 கல்லூரிகளில் பணிபுரிந்ததாக வழங்கிய சான்றிதழும் போலியானது என்று தெரிந்தது. அதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 கைது

இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் சையதுஷபி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து பன்னீர்செல்வத்தை தேடி வந்தார். இந்த நிலையில், நவம்பர் மாதம் பன்னீர்செல்வம் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சுமார் 4 மாதங்களாக தலைமறைவாக காணப்பட்ட பன்னீர்செல்வம் நேற்று வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலி பணி அனுபவ சான்றிதழ் கொடுத்து பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்