முத்துப்பேட்டை அலையாத்திக்காடுக்கு சுற்றுலா செல்ல தடை
கொரோனா பரவல் எதிரொலியாக முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
முத்துப்பேட்டை:
கொரோனா பரவல் எதிரொலியாக முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அலையாத்திக்காடு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. இந்த காட்டின் அழகை ரசிக்க தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா செல்ல தடை
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில், முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்லவும், சுற்றுலா பயணிகள் படகுகளில் செல்லவும் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.