விழுப்புரத்தில் பரபரப்பு: தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை குடும்ப தகராறில் மனைவி வெறிச்செயல்
விழுப்புரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
கட்டிட தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சந்தோஷ் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்றபோது அவருக்கும், சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த சுரேகா (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு சந்தோஷ், வெளியூர்களுக்கு தான் வேலைக்கு செல்லும் இடங்களில் அப்பகுதியில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு அபிநயா (11) என்ற மகளும், வெற்றிவேல் (7) என்ற மகனும் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் சந்தோஷ் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். சந்தோசின் மனைவி சுரேகா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
குடும்ப தகராறு
சந்தோசுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சுரேகாவின் நடத்தையிலும் சந்தோஷ் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை சுரேகா கண்டித்துள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தோஷ் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு மீண்டும் சுரேகாவிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் சந்தோஷ் அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்ட முயன்றார்.
கத்தியால் குத்திக்கொலை
இதில் சுதாரித்துக்கொண்ட சுரேகா, சந்தோஷிடமிருந்த கத்தியை பிடுங்கி ஆத்திரத்தில் கணவர் என்றும் பாராமல் அவரது மார்பு பகுதியில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சுரேகா, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி சரண் அடைந்தார்.
இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சற்குணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி கைது
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் கணவனை மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.