போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திருப்பூரில் கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் குமரன் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பண்டிகை விடுமுறை
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள பல பனியன் நிறுவனங்கள் மற்றும் சில கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதேபோல், வடமாநிலத்தவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் வாகனப்போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும், மார்க்கெட் மற்றும் கடை வீதிகளுக்கு புத்தாடைகள் வாங்குவதற்கும், பொங்கல் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காகவும் அதிக அளவில் பொதுமக்கள் குடும்பத்துடன் செல்கின்றனர். இதனால் மாநகரின் பிரதான ரோடுகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குமரன் ரோட்டில் கடந்த இரண்டு தினங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
நேற்றுமுன்தினம் காலை முதலே குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. குறிப்பாக மதியம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று நகர்ந்து செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்தபடி நின்றதால் ஒவ்வொரு வாகனங்களும் ஊர்ந்தபடி சென்றன.
இதைதொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்ட போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இனிவரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, குமரன் ரோடு மற்றும் மாநகரின் முக்கிய ரோடுகளிலும், கடை வீதிகளிலும் கூடுதலாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.