மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு கொரோனாவுக்கு பலி
மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு கொரோனாவுக்கு பலியானார்.
மதுரை
மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு கொரோனாவுக்கு பலியானார்.
கொரோனா
மதுரை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (வயது 60).
இவர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்பாபு திடீரென உயிரிழந்தார்.
ராம்பாபு, கடந்த 1960-ம் ஆண்டு பிறந்தவர். அவர்களது குடும்பம் காங்கிரஸ் பராம்பரியமிக்க அரசியல் குடும்பம் ஆகும். அவரது தந்தை ஏ.ஜி.சுப்புராமன் காங்கிரஸ் சார்பில் 1980,1984-ம் ஆண்டு என இருமுறை மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். அதில் 1984-ம் ஆண்டு தேர்தலில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவை எதிர்த்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையும், மகனும்...
அதன்பின் ராம்பாபு 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 முறை மதுரை எம்.பி.யாக இருந்தார். ராம்பாபுவும், அவரது தந்தை சுப்புராமனும் தொடர்ச்சியாக 5 முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.
அதில் ராம்பாபு 1989-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியையும், 1991-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியின் மோகனையும், 1996-ம் ஆண்டு ஜனதா கட்சியின் சுப்பிரமணியசுவாமியும் எதிர்த்து வெற்றி பெற்றார். அவர் 1998-ம் ஆண்டு சுப்பிரமணியசுவாமியுடன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
தான் எம்.பி.யாக இருந்த காலத்தில் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு மதுரைக்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.
அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.