சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலி

சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.

Update: 2022-01-11 21:04 GMT
சங்ககிரி, 
பிளஸ்-1 மாணவர்
சங்ககிரி அருகே ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் ஆலத்தூர் தபால் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயமணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர்.
இவர்களின் மகள் நித்யா (வயது 25), பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் கிருஷ்ணா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பத்திற்கு நேரம் சரியில்லை என கருதிய சுப்பிரமணியம், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சங்ககிரி அருகே முனியப்பன் பாளையம் கோட்ட பழத்தான்காடு பகுதிக்கு குடும்பத்துடன் வாடகை வீட்டுக்கு சென்று விட்டார்.
மயங்கி கிடந்தார்
நேற்று அதிகாலை 5 மணிக்கு சுப்பிரமணியம் நடைப்பயிற்சிக்கும், அவருடைய மனைவி கோவிலுக்கும் சென்று விட்டனர். அப்போது கிருஷ்ணா வீட்டில் உள்ள குளியல் அறைக்கு  சென்றவர் வெளியே வரவில்லை. 
இதனிடையே சுப்பிரமணியம் நடைப்பயிற்சி முடித்துவிட்டு காலை 6.30 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் குளியல் அறையில் இருந்து சத்தம் வந்ததை கேட்டு ஓடி சென்றுபார்த்தார். அங்கு தனது மகனின் வலது உள்ளங்கையில் தோல் உரிந்து சுயநினைவின்றி மயங்கி கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
மேலும் மகனின் கையில் குளிப்பதற்காக தண்ணீருக்குள் போடும் வாட்டர் ஹீட்டர் கம்பி இருந்ததாகவும், தனது மகன் கவனக்குறைவாக வாட்டர் ஹீட்டர் போட்ட போது மின்சாரம் தாக்கியதையும் அறிந்தார். பின்னர் உடனடியாக சுப்பிரமணியம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி கிடந்த மகன் கிருஷ்ணாவை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். 
அங்கு கிருஷ்ணாவை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்