பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் தி.மு.க. அரசு ரூ.30 கோடி ஊழல் சேலத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக தி.மு.க. அரசு மீது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-01-11 21:00 GMT
ஓமலூர், 
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட  அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
முன்னதாக எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கொண்டிருக்கிறது. அதில் 21 பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழுமையாக பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படவில்லை.
தரமற்ற பொருட்கள்
அரசு வழங்கும் 21 பொருட்களில் துணிப்பையும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் இந்த பை வழங்கப்படவில்லை. 
திருவண்ணாமலையில் கலெக்டர் ஆய்வு செய்த போது 2½ டன் வெல்லம் உண்ணுவதற்கு உகந்தது அல்ல என்று கூறி அதை வழங்குவதை ரத்து செய்துள்ளார். இப்படி தரமற்ற பொருட்களை ரேஷன் கடை மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு வழங்குவது கண்டிக்கத்தக்கது.
ரேஷன் கடைகளில் அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு எப்படி இருக்கிறது? என்று ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராசிபுரம் பகுதி பொதுமக்கள் தெளிவாக கூறி இருக்கிறார்கள். ஓமலூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ரேஷன் கடையிலும் தரமற்ற வெல்லம் கொடுத்துள்ளனர்.
நடவடிக்கை
தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூறி உள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிக்க நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தோம். அதை விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்தோம். நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை தி.மு.க. மீண்டும் தொடங்கி உள்ளது.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பொருட்களில் பிளாஸ்டிக் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என தி.மு.க. சொன்னது. ஆனால் மக்களுக்கு வழங்கிய பொருட்களில் இந்தி எழுத்துகள் தான் அச்சிடப்பட்டு உள்ளது. 
ரூ.30 கோடி ஊழல்
தமிழகத்தில் பரிசு தொகுப்பு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நம்முடைய உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கினால் மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் வடமாநிலத்தில் இருந்து தரமில்லாத இந்த பொங்கல் பொருட்களை வாங்கி மக்களிடம் வழங்கி வருகின்றனர். இதற்கு காரணம் கமிஷன் அதிகமாக கிடைக்கிறது. கலெக்சன், கமிஷன், கரப்சன் ஆகியவை தான் தி.மு.க.வின் தார்மீக மந்திரமாக இருக்கிறது.
இன்றைக்கு குறைந்த விலையில் கரும்பு வாங்கி கொடுக்கின்றனர். கரும்புக்கு விலையை அரசு ரூ.33 ஆக நிர்ணயித்து இருக்கிறது. ஆகவே பயனாளிகளுக்கு நல்ல கரும்பு வாங்கி கொடுத்திருக்கலாம். அதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள். ஒரு கரும்புக்கு ரூ.15 வரை இந்த அரசு ஊழல் செய்துள்ளது. மொத்தம் ரூ.30 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் தி.மு.க. கொள்ளையடித்தது தான் மிச்சம். பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
பொய் வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஒரு பையின் விலை ரூ.60 என்கிறார்கள். ஆனால் ஒரு பையின் விலை ரூ.30 தான் இருக்கும். அதிலும் ஒரு பைக்கு ரூ.30 வரை முறைகேடு நடந்துள்ளது. 
இதையெல்லாம் எனக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் கூறுகிறேன். பையின் முழுமையான விவரம் தெரியவில்லை. தைப்பொங்கலை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி, சேலை வழங்கப்படும். ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு அதை வழங்கவில்லை. 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தி.மு.க. அரசால் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வழக்கு போட்டுள்ளனர். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவதூறு பரப்புவதே இந்த அரசின் நோக்கம் ஆகும். அவர் அமைச்சராக இருந்த போது கடுமையாக விமர்சனம் செய்தார்.
திறமையில்லாத அரசு
இதை தாங்கி கொள்ள முடியாமல் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய்யான வழக்குப்பதிவு செய்து இன்றைக்கு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 11 அரசு கல்லூரிகளும் நான் முதல்-அமைச்சராக இருந்த போது கொண்டுவந்தது தான். இதை யாரும் மறுக்க முடியாது.
இந்த அரசு சரியான முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறி விட்டது. ஏற்கனவே கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதை பயன்படுத்தி தான் தற்போது கட்டுப்படுத்தினார்கள். புதிதாக ஒன்றும் செய்யவில்லை. திறமையில்லாத அரசால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டம்
கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்த அரசு, விவசாயிகளிடம் ரூ.14 வரை பேசி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த அரசு ஒரு முழுமையான அரசு கிடையாது, டம்மியாக தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் குழு அமைத்து வருகிறது. இந்த அரசு வேகமாக செயல்படும் அதிகாரிகளை வைத்து பணி செய்ய வேண்டும். 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 மாதத்துக்கு மட்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் ஆன்லைன் ரம்மி என்பது 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிற ஒரு சூதாட்டம். தி.மு.க. ஆட்சியில் ஐகோர்ட்டில் சரியாக வாதாடாததால் எதிர்தரப்புக்கு தீர்ப்பு சாதகமாக வந்தது. 
சட்டத்துறை அமைச்சர் நாங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வோம் என கூறுகிறார். ஆனால் இன்னமும் தடை செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். 
கிடப்பில் போட்டு விட்டனர்
ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி 5 மாதம் ஆகிவிட்டது. இன்னமும் அதற்கு தடை ஆணை வாங்க முடியவில்லை. ஆனால் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படை அமைக்கிறார்கள். நேற்று கூட ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து ஒருவர் இறந்திருக்கிறார். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை ஆணை வாங்காமல் ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டு விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்ட முடிவில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

மேலும் செய்திகள்