147 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

நாகர்கோவில் பறக்கின்கால் கால்வாயில் 147 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2022-01-11 20:10 GMT
நாகர்கோவில்,
நாகர்கோவில் பறக்கின்கால் கால்வாயில் 147 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றம்
நாகர்கோவில் பழையாற்றில் ஒழுகினசேரி பண்டு பகுதியில் இருந்து ஒரு கால்வாய் பிரிந்து பறக்கை பெரியகுளம் வரை செல்கிறது. இந்த கால்வாயின் இருபுறங்களும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து பறக்கின்கால் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றினர். அந்த வகையில் மொத்தம் 302 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால், அங்கு வசித்து வந்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்துக்கு இடம் பெயர்ந்தனர்.
இதற்கிடையே கால்வாயில் மேலும் 147 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினர். இதையடுத்து பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டனர்.
காங்கிரீட் வீடுகள்
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. ரெயில்வே ரோட்டில் இருந்து தொடங்கிய இந்த பணியானது குளத்தூர் வரை நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அவற்றில் ஒரு சில வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்தனர். அவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
ஏராளமான குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு பகுதியில் காங்கிரீட் வீடுகளும் இருந்தன. அவையும் பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்