பாதயாத்திரை பக்தர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
ஊதியூரில் முக கவசம் அணியாமல் சென்ற பாதயாத்திரை பக்தர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காங்கேயம்
ஊதியூரில் முக கவசம் அணியாமல் சென்ற பாதயாத்திரை பக்தர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பழனிக்கு பாத யாத்திரை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த சுகாதார துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தைப்பூசம் நெருங்கும் இந்த நேரத்தில் சேலம், ஈரோடு, பவானி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காங்கேயம், ஊதியூர் வழியாக பழனிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு குள்ளம்பாளையம், ஊதியூர் பகுதிகளில் சுகாதார துறையினர் தற்காலிக பந்தல் அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கட்டாய பரிசோதனை
முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதோடு, முக கவசம் அணியாமல் செல்லும் பாதயாத்திரை பக்தர்களை பிடித்து அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று குள்ளம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஊதியூரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோசப்சகாயராஜ், சுகாதார ஆய்வாளர்கள் குழந்தைவேல், சிவக்குமார், இளவரசன், அஜெய் ஆகியோர் முக கவசம் அணியாமல் வரும் பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.