அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையிட்டவர்களிடம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2022-01-11 18:17 GMT
நாமக்கல்:-
குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையிட்டவர்களிடம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடியிருப்பு
நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டி கணபதிநகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.76 கோடியே 6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் 960 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. அதற்கு 500-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளனர். அதில் 19 பேருக்கு மட்டும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குடியிருப்பை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கொண்டிசெட்டிப்பட்டி குடியிருப்புகளை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகளும், வருவாய்துறையினரும் ஈடுபட்டனர்.
முற்றுகையிட முயற்சி
இதையடுத்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு பணம் செலுத்தி இருந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அங்கு இருந்த அதிகாரிகளிடம், குடியிருப்பை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வீடு வழங்குவதாக கூறிவிட்டு தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவது நியாயம் இல்லாதது என்றும், பணம் செலுத்தி விட்டு வீடுகளுக்காக காத்திருக்கும் எங்களுக்கு உடனே வீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து தாசில்தார் தமிழ்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்