கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார
சிவகங்கை,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
புத்தாடை
சிவகங்கை மண்டல இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இலவச சீருடை மற்றும் புத்தாடைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
200 பேருக்கு...
கோவில் பணி என்பது கொடுத்து வைப்பவர்களுக்கு மட்டும்தான் என்று உவமையாக சொல்வதுண்டு. அந்த அளவிற்கு இத்தகையப்பணி அரியத்தக்கப் பணியாகும். இதனால் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழர் திருநாளையும், பொங்கல் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடும் வண்ணம் இலவச சீருடை மற்றும் புத்தாடைகள் வழங்க உத்தரவிட்டு, ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர்ஆணையிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மண்டலத்தை சேர்ந்த 200 பேருக்கு ரூ.2 லட்சத்துக்கு 40 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச சீருடை மற்றும் புத்தாடைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் .செல்வராஜ், சிவலிங்கம், செல்வி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், நகர் செயலாளர் துரை ஆனந்த், மாவட்ட மாணவர் அணி துனை அமைப்பாளர் மதன்குமார், மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் மற்றும் அரசு அலுவலாகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.