பொங்கல் பொருள் வினியோகம் குறித்து ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் சோதனை
பொங்கல் பொருள் வினியோகம் குறித்து ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் சோதனை செய்தார்.
திண்டுக்கல்:
தமிழக அரசு சார்பில், பொதுமக்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 440 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி மாவட்டம் முழுவதும் செயல்படும் 1,035 ரேஷன்கடைகள் மூலம் கடந்த 4-ந்தேதி முதல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் நேருஜிநகர், கிழக்கு கோவிந்தாபுரம், முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன்கடைகளில் கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது 21 வகையான பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா? என்று பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் பொங்கல் பொருட்கள் தரமாக இருக்கிறதா? என்று சோதனை செய்தார். இதுமட்டுமின்றி எந்த பொருளும் விடுபடாமல் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன்கடை ஊழியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.