விவசாயிகள் திடீர் சாலை மறியல்

சேத்துப்பட்டில் பொன்னி நெல் குறைந்த விலைக்கு போட்டதால் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-11 16:30 GMT
சேத்துப்பட்டு

சேத்துப்பட்டில் பொன்னி நெல் குறைந்த விலைக்கு போட்டதால் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

விவசாயிகள் சாலைமறியல்

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினமும் விவசாயிகள் நெல், மணிலா மற்றும் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விவசாயிகள் சுமார் 4 ஆயிரம் மூட்டைகளில் பொன்னி நெல் கொண்டு வந்தனர். இந்த பொன்னி நெல்லுக்கு குறைந்த விலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் காலை 11.30 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

சுமார் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை, காஞ்சீபுரம், வந்தவாசி, போளூர், ஆரணி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து போடுகிறார்கள் என்று கோஷமிட்டனர்.

 இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காளீஸ்வரன், செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ், திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் தர்மராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

இதில் ஒரு சில விவசாயிகள் விலைக்கு ஒப்புதல் அளித்தனர். ஒரு சில விவசாயிகள் நாங்கள் மறுநாள் மீண்டும் நெல்லை கமிட்டியில் வைக்கிறோம் என்று கூறினார்கள். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சேத்துப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்