தீங்கு விளைவிக்கும் நிறமி கலந்த 160 கிலோ அப்பளம் பறிமுதல்
தூத்துக்குடியில் தீங்கு விளைவிக்க கூடிய நிறமி கலந்த 160 கிலோ அப்பளத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தீங்கு விளைவிக்க கூடிய நிறமி கலந்த 160 கிலோ அப்பளத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரையின்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மளிகை கடைகளில் தீங்கு விளைவிக்க கூடிய நிறமி கலந்த அப்பளம் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் தூத்துக்குடி மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, 3 கடைகளில் நிறம் சேர்க்கப்பட்ட சுமார் 110 கிலோ குடல் அப்பளம், ஸ்டார் அப்பளம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நிறம் சேர்த்த அப்பளங்களை ரீபேக்கிங் செய்து, சில்லறை மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த கடையையும் ஆய்வு செய்து, 50 கிலோ கலர் அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு கடையில் கெட்டுப்போன 10 கிலோ பிஸ்கட்கள் பறிமுதல் செய்து, அந்த இடத்திலேயே பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
வழக்கு
ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கலர் அப்பளம் விற்பனை செய்த 6 வணிகர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், தரம் குறைவான அப்பளம் விற்பனை செய்ததற்காக, மாவட்ட வருவாய் அலுவலரிடம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனவே, வணிகர்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடிய பாதுகாப்பற்ற நிறமி கலந்த அப்பளத்தை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்களும் நிறமி கலந்த அப்பளத்தை தவிர்த்து, நிறமி கலக்காத அப்பளம் மற்றும் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உணவு பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.