திருடனை பிடிக்க உதவிய வாலிபருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடனை பிடிக்க உதவிய வாலிபரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). இவருடைய மோட்டார் சைக்கிளை கடந்த 4-ந் தேதி மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் புதியம்புத்தூர் போலீஸ்காரர் புதியம்பிள்ளை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அங்கு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் உசிலம்பட்டியை சேர்ந்த பெரியராமர் (28) என்பவர் தப்பி சென்றார். உடனடியாக போலீஸ்காரர், அந்த வழியாக வந்த புதூர்பாண்டியபுரத்தை சேர்ந்த வேல்ராஜ் (24) என்பவர் உதவியுடன் பெரியராமரை விரட்டி பிடித்தார். இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடனை பிடிக்க உதவிய வேல்ராஜை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
இதே போன்று, முத்தையாபுரம் பகுதியில் அரசு பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.20 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் ஆறுமுகசாமி, கண்டக்டர் ஆதிஅப்பாசி ஆகியோரையும் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கணேஷ்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.