திண்டுக்கல்-பாலக்காடு இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
திண்டுக்கல்-பாலக்காடு இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி ரெயில் தண்டவாளங்களின் உறுதி தன்மையை சோதனை செய்ய ரெயில்வே பொறியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி தெற்கு ரெயில்வேயில் குழு அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதியாக சோதனை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் திண்டுக்கல்-பாலக்காடு இடையே தண்டவாளத்தை சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மதுரை கோட்ட உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தனர். பின்னர் 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயிலை இயக்கி சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி திண்டுக்கல்லில் இருந்து காலை 9.30 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
110 கி.மீ. வேகத்தில் இயக்கம்
இந்த ரெயில் அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதனால் 42 நிமிடங்களில் ரெயில் பழனியை சென்றடைந்தது. அதையடுத்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை ரெயில் அதே வேகத்தில் இயக்கப்பட்டது. அப்போது ரெயிலில் நவீன ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டு அதிர்வு மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. அதில் ஏதேனும் குறைகள் இருப்பது தெரியவந்தால் சரிசெய்யும்படி ரெயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.