மளிகை கடையில் ரூ.10 லட்சம் திருட்டு
மளிகை கடையில் 10 லட்சத்தை திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவையில் கண்காணிப்பு கேமராவை மறைத்து, மளிகை கடையில் ரூ.10 லட்சத்தை திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
மளிகை கடையில் திருட்டு
கேரளா மாநிலம் தலசேரியை சேர்ந்தவர் அஜீஸ். இவர், கோவை டவுன்ஹால் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவருடைய கடையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சம்ஜீத் (வயது 27) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு கடை யை மூடிவிட்டு உக்கடத்தில் உள்ள தனது அறைக்கு சென்றார்.
அவர், நேற்று காலை கடையை திறந்தார். பின்னர் அவர், பணப்பெட் டியில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளை போய்விட்டதாக கடை உரிமையாளர் அஜீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜீஸ் கடைக்கு விரைந்து வந்து பார்த்த போது பணப்பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கண்காணிப்பு கேமராவை மறைத்தார்
இது குறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் கடையில் பொருத்தப் பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சம்ஜீத் ஸ்டிக்கரை எடுத்து ஒட்டி மறைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சம்ஜீத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
நாடகமாடிய ஊழியர் கைது
இதில், சம்பவத்தன்று இரவு சம்ஜீத் கடையை மூடி விட்டு சென்றார். பின்னர் அவர், நள்ளிரவில் கடையை திறந்து பணப்பெட்டியில் இருந்த ரூ.10 லட்சத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தனது அறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மளிகை கடையில் ரூ.10 லட்சத்தை திருடி விட்டு பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மளிகை கடையில் திருட்டு நடந்ததாக தகவல் வந்த ½ மணி நேரத்துக்குள் விசாரணை நடத்தி சம்ஜீத்தை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.