கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் கடைக்காரர்களுக்கு ரூ 12500 அபராதம்
பொள்ளாச்சியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய கடைக்காரர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய கடைக்காரர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆய்வு
கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில்குமார், மணிகண்டன், ஆறுமுகம் மற்றும் மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை மீறிய கடைக்காரர்களிடம் இருந்து ரூ.12,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அபராதம் விதிக்கப்படும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். உணவகங்களின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி மருந்து வைக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில் பெயர், செல்போன் எண், உடல் வெப்பநிலையின் அளவை குறிப்பிட வேண்டும்.
ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றாலும் உரிமையாளரிடம் அபராத தொகை வசூலிக்கப்படும். ரூ.200 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராத தொகை வசூலிக்கப்படும். பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.