தினத்தந்தி செய்தி எதிரொலி தரமற்று அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடிப்பு கலெக்டர் அதிரடி
தினத்தந்தி செய்தி எதிரொலியால் தரமற்று அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கலெக்டர் உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பேரூராட்சி 4-வது வார்டு மின்வாரிய காலனி பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு புதிதாக கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. இந்த பணி தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தரமற்ற பணிகள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து நேற்று ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில் பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ராஜாராம் நேற்று உத்தமபாளையம் வந்து புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர் கால்வாய் பணிகள் தரமற்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், தரமில்லாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. மேலும் இடிக்கப்பட்ட இடங்களில் புதிதாக தரமான முறையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயற்பொறியாளர் ராஜாராம் எச்சரிக்கை விடுத்தார்.