3 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு
3 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
அரியலூர்:
வழிபாட்டு தலங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் அரசின் உத்தரவின்படி கடந்த 6-ந்தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று முன்தினம் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது. இதற்கிடையே அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகளின்படி கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரியலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவை மூடப்பட்டு காட்சியளித்தன.
அன்றைய நாட்களில் கோவில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் வெளியே நின்று வழிபட்டனர். கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் பிரார்த்தனையிலும், முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் தொழுகையிலும் ஈடுபட்டனர்.
பக்தர்கள் தரிசனம்
இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று அரியலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அரியலூரில் பெருமாள், சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுகையிலும், தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.