டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் நசுங்கி சாவு; 4 பேர் உயிருக்கு போராட்டம்

பெங்களூரு அருகே கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி கவிழ்ந்து விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் நசுங்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள்.

Update: 2022-01-10 21:30 GMT
பெங்களூரு: பெங்களூரு அருகே கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி கவிழ்ந்து விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் நசுங்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள்.

டிப்பர் லாரி கவிழ்ந்தது

பெங்களூரு அருகே கும்பலகோடு பகுதியில் நேற்று மாலையில் ஒரு டிப்பர் லாரி ஜல்லி கற்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தது. அதே சாலையில் 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென்று டிப்பர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாக தெரிகிறது. பின்னர் அந்த லாரி பல்டி அடித்து ஜல்லி கற்களுடன் கவிழ்ந்தது.

அவ்வாறு கவிழ்ந்து விழுந்த போது, அந்த சாலையில் சென்ற 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது லாரி விழுந்து அமுக்கியது. இதனால் லாரியில் இருந்த ஜல்லி கற்கள், கார்கள் மீது விழுந்தது. இதன் காரணமாக 2 கார்களும் அப்பளம் போல நொறுங்கி சேதம் அடைந்தது. மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.

6 பேர் நசுங்கி சாவு

இந்த கோர விபத்தில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் கும்பலகோடு போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தார்கள். பின்னர் அவர்கள், பொக்லைன் வாகனம் மூலமாக கார்கள் மீது விழுந்து கிடந்த டிப்பர் லாரியை நீண்ட நேரம் போராடி அகற்றினார்கள். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களின் உடல்களை கைப்பற்றியும் விசாரித்தனர். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்தில் பலியானவர்கள் பெயர் கீர்த்திகுமார்(வயது 38), நிகிதா ராணி(29), வீணம்மா(42), இந்திரகுமார்(14) என்று தெரிந்தது. மற்ற 2 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் என்று தெரியவந்துள்ளது.

சாலை அமைக்கும் பணியால்...

இந்த நிலையில், விபத்து நடந்த கும்பலகோடு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கவனிக்காமல் டிப்பர் லாரியை டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததால், அவரது கட்டுப்பாட்டை இழந்து லாரி பல்டி அடித்து கவிழ்ந்ததுடன், கார்கள், மோட்டார் சைக்கிள் மீது விழுந்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து கும்பலகோடுவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்