தூக்குப்போட்டு அரசு பெண் என்ஜினீயர் தற்கொலை; மகள் இறந்த துக்கத்தில் சோக முடிவு

உப்பள்ளி தங்கும் விடுதியில் மகள் இறந்த துக்கத்தில் பெண் என்ஜினீயர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-10 21:20 GMT
உப்பள்ளி: உப்பள்ளி தங்கும் விடுதியில் மகள் இறந்த துக்கத்தில் பெண் என்ஜினீயர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 மகள் இறந்த துக்கத்தில்...

மைசூரு டவுனை சேர்ந்தவர் சாந்தலா(வயது 45). இவர், பெங்களூரு நெலமங்களாவில் அரசு சுற்றுச்சூழல் துறையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சுபரித், உப்பள்ளியில் குத்தகைக்கு தங்கும்விடுதியை எடு்த்து நடத்தி வருகிறார். 

இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருந்தார். அவர், மைசூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாந்தலாவின் மகள், பாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மகள் இறந்த துக்கத்தில் சாந்தலா இருந்து வந்தார். 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மகள் இறந்த துக்கத்தில் இருந்து சாந்தலா மீளவில்லை என்று தெரிகிறது. 

 தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சாந்தலா, கணவரை சந்திக்க உப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது தங்கும்விடுதியில் சாந்தலா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்த உப்பள்ளி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சாந்தலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

 உருக்கமான கடிதம் சிக்கியது

இதற்கிடையே தங்கும் விடுதியில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சாந்தலா எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. 
அந்த கடிதத்தில், தனது ஒரே மகள் இறந்தது மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவளை பிரிந்து வாழ முடியவில்லை. இதனால் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்