கர்நாடகத்தில் மேலும் 146 பேருக்கு ஒமைக்ரான்
கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பரவல் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பும் வேகம் எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 333 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 146 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் டெல்டா வகை கொரோனா, இன்னொரு பக்கம் உருதமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.