மண்வெட்டியால் அடித்து சித்தப்பாவை கொன்ற வாலிபர்

பொங்கல் செலவுக்கு ரூ.2 ஆயிரம் தராததால் மண்வெட்டியால் அடித்து சித்தப்பாவை கொன்ற வாலிபர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-01-10 20:19 GMT
திருவையாறு;
பொங்கல் செலவுக்கு ரூ.2 ஆயிரம் தராததால் மண்வெட்டியால் அடித்து சித்தப்பாவை கொன்ற வாலிபர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாழை இலை அறுக்கும் வேலை 
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பூந்துருத்தி நடுப்படுகையை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 57). கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள வாழைக்கொல்லையில் வாழை இலை அறுக்கும் வேலை செய்து வந்தார்.
நீலமேகத்தின் அண்ணன் குருசாமி மகன் மதிவாணன்(32). இவரும் வாழை இலை அறுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று காலையில் இருவரும் அங்குள்ள ஒரு வாழைக்கொல்லையில் தனித்தனியாக  இலை அறுத்துக்கொண்டு இருந்தனர். 
மண்வெட்டியால் அடித்துக்கொலை
அப்போது சித்தப்பா நீலமேகத்திடம் பொங்கல் செலவிற்கு ரூ.2 ஆயிரம் பணம் வேண்டும் என்று மதிவாணன் கேட்டுள்ளார். அதற்கு நீலமேகம் தன்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். 
இதில் ஆத்திரம் அடைந்த மதிவாணன், மண்வெட்டி கட்டையால் நீலமேகத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே  நீலமேகம் பரிதாபமாக இறந்தார். 
விஷம் குடித்தார்
ஆத்திரத்தில் தனது சித்தப்பாவை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மதிவாணன் தான் செய்த தவறை உணர்ந்தார். இதனையடுத்து வாழைக் கொல்லை கொட்டகையில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து மதிவாணன் குடித்து விட்டார். 
அப்போது அக்கம் பக்கத்தில் வேலை பார்த்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்தபோதுதான் அங்கு நடந்த சம்பவம் தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீலமேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
ஆஸ்பத்திரியில் அனுமதி
மேலும் பூச்சி மருந்து(விஷம்) குடித்த மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  
இது குறித்து நீலமேகத்தின் மனைவி தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
குடும்பம்
கொலை செய்யப்பட்ட நீலமேகத்திற்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், திவாகர், தினேஷ் என்ற மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யாவிற்கு திருமணமாகி விட்டது. திவாகர், தினேஷ் ஆகிய இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். 
சித்தப்பாவை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மதிவாணன் மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்