புதிதாக கட்டிய விருதுநகர், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரிகள் நாளை திறப்பு

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 11 இடங்களில் கட்டிய புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி வழியாக திறந்துவைக்கிறார். இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி பங்கேற்கிறார்.

Update: 2022-01-10 19:34 GMT
விருதுநகர்,
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 11 இடங்களில் கட்டிய புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி வழியாக திறந்துவைக்கிறார். இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி பங்கேற்கிறார்.
11 புதிய மருத்துவக்கல்லூரிகள்
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக 11 மாவட்டங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. அதன்படி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
இதற்காக, மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி அடங்கும். ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம் 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவுக்கு பா.ஜ.க.வினர் ஏற்பாடு
இந்த நிலையில், இந்த 11 புதிய மருத்துவக்கல்லூரிகளையும் நாளை (புதன்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி விருதுநகரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகையையொட்டி, தமிழக பா.ஜ.க.வினரும் மதுரையில் பொங்கல் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திடீர் ரத்து
இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் தமிழகம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில், குறிப்பிட்ட நாளில் டெல்லியில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளையும் அவர் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு, டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்களையும் திறந்துவைக்கிறார். மேலும், மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் அவர் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்கிறார்.
மருத்துவ படிப்பில் கூடுதலாக 1,450 இடங்கள்
தமிழகத்தில் ஏற்கனவே 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில், மொத்தம் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தற்போது, இந்த 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்படுவதன் மூலம் கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மேலும் செய்திகள்