வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவி

வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

Update: 2022-01-10 19:28 GMT
விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.36 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.  வெம்பக்கோட்டை தாலுகா சிப்பிபாறை கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமின் போது பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை அமைச்சர்கள் வழங்கினர். இதில் கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து விருதுநகர் தர்காஸ் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற அமைச்சர்கள்  பொங்கல்தொகுப்பு பொருட்கள் வினியோகத்தை ஆய்வு செய்தனர். மேலும் தொகுப்பு பொருட்களை விடுபடாமல் ரேஷன் கார்டுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் தாமதமில்லாமல் வழங்க வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்