என்.எல்.சி. சுரங்கம் விரிவாக்கப்பணிக்காக வீடுகள் இடிப்பு

மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி. சுரங்கம் விரிவாக்கப்பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இழப்பீடு கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Update: 2022-01-10 17:45 GMT
மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே ஓம்சக்தி நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்த பகுதியில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்கம் 1 விரிவாக்கப்பணியை மேற்கொள்ள தீர்மானித்தது. 
அதன்படி, மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வசித்து வருகின்றனர். இதில் 186 குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு இதுவரையில் எந்தவித இழப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை. 
இதுபற்றி அவர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து தங்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரையில் அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

வீடுகள் இடிக்கும் பணி

இதற்கிடையே இந்த பகுதியில் இருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி கடந்த 6-ந்தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கடலூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் என்.எல்.சி. அதிகாரிகள் வீடுகளை இடிக்க தயாரானார்கள். அப்போது அங்குவந்த அந்த பகுதி மக்கள்  விடுப்பட்டுள்ள  அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கிய பிறகு தான், வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம் என்று தெரிவித்தனர்.

தர்ணா போராட்டம்

தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் குரு, ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு மற்றும் அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இழப்பீடு பெறாமல் உள்ளவர்களின் ஆவணங்களை பெற்று என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேசி இழப்பீட்டு தொகையை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுப்பதகா உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 
தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகள் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  தமிழர்திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பலர் தங்களது வீடுகளுக்கு வர்ணம் பூசும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்கு இப்பகுதி மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருவது, அவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்