ஈரோடு மாவட்டத்தில் ரூ.104 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.104 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-01-10 16:42 GMT
ஈரோடு மாவட்டத்தில் ரூ.104 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஈரோடு மாவட்டத்துக்கான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு உள்ள கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.104 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள 66 கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.45 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரம் செலவில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 40 ஆயிரத்து 95 பேருக்கு ரூ.209 கோடியே 76 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.355 கோடியே 26 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பிரமாண்ட அரங்கு
விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 மாடிகள் கொண்ட கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா நோய் தடுப்பு உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கு உள்பட மொத்தம் 66 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர். ஈரோட்டில் நடந்த விழாவில் எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், அ.கணேசமூர்த்தி, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்