கொரோனா தொற்று அதிகரிப்பால் முழு ஊரடங்கு: திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்
கொரோனா தொற்று அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது. தற்போது தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் கண்டிப்பாக மூட வேண்டும், ஓட்டல்கள், திரையரங்குகள் பொது இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் கொண்டு இயங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை 5 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
இந்தநிலையில் திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான சி.வி. நாயுடு சாலை, ஜெ.என். சாலை, காக்களூர் சாலை, செங்குன்றம் சாலை, உழவர் சந்தை என திருவள்ளூர் நகரின் முக்கிய பகுதிகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அதைப்போல காக்களூர், மணவாளநகர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருமழிசை, வெள்ளவேடு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள ஓட்டல் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் பொதுப் போக்குவரத்து பஸ்கள், ஆட்டோக்கள், கார் போன்ற அனைத்து வாகனம் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டதால், மாவட்டத்திலுள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடின.
அபராதம்
இந்தநிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் திருவள்ளூர் நகரின் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் எச்சரித்து இனிமேலும் இது போல் தேவையில்லாமல் சுற்றித் திரியக் கூடாது என எச்சரித்தனர்.
இந்த சோதனையின்போது, முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் சார்பில் இலவசமாக முக கவசம் வழங்கி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் காரணமின்றி வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
திருத்தணி
பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரி பேட்டை, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
திருத்தணி நகரில் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியவாசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் நகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மக்கள் மற்றும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.
ஊத்துக்கோட்டையில் நேற்று முழு ஊரடங்கையொட்டி, இறைச்சி கடைகள், தொழில் நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோரின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.