கொரோனா பரவலால் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து பெட்டியில் மனுக்களை போட்டுச்சென்ற மக்கள்

கொரோனா பரவலால் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டுச்சென்றனர்.

Update: 2022-01-10 15:02 GMT
திண்டுக்கல்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், மனுக்களை கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது.
இந்த பெட்டியில், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை போட்டுச்சென்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த நர்சுகள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அங்குள்ள பெட்டியில் ஒரு கோரிக்கை மனுவை போட்டனர். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சித்தா சிகிச்சை மையங்கள் மீண்டும் திறக்கப்படலாம். அவ்வாறு திறக்கப்பட்டால் அதில் பணியாற்ற அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ‘ஆயுஸ் செவிலியர்’ படிப்பை படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்