மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்

Update: 2022-01-10 14:47 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை ஒத்திவைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் மக்கள் நேரில் வருவதை தவிர்த்து தபால் மூலமும், வாட்ஸ்-அப் மூலமும் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து இருந்தார்.
மனு பெட்டி
இதைத் தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கலெக்டர் அலுலகத்துக்கு மனு கொடுக்க வந்தால், அவர்கள் மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. அதன் அருகே அலுவலர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.
இதில் காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன், ஏரல், பெருங்குளத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பெட்டியில் மனு போட்டார். 
அதே நேரத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.காமராஜ் ஆகியோர் தனித்தனியாக மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பஞ்சாப் சம்பவம் குறித்து விளக்கி தமிழக கவர்னருக்கான கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.

மேலும் செய்திகள்