ரூ.100 கோடி துணி உற்பத்தி பாதிப்பு
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
சுல்தான்பேட்டை
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
கூலி உயர்வு
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் உரிமையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்களால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே புதிய கூலி உயர்வை அமல்படுத்த திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனினும் அதை ஜவுளி உற்பத்தியாளர்கள் பொருட்படுத்தவில்லை.
வேலை நிறுத்தம்
இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்லடம், சோமனூர், அவினாசி, தெக்கலூர், மங்கலம், 63.வேலம்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம், புதுப்பாளையம் ஆகிய 9 சங்க விசைத்தறியாளர்கள் சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட புதிய கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.100 கோடி உற்பத்தி பாதிப்பு
இதன் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.100 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதில், பல்லடம் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறிகள் ஓடாததால், ரூ.3 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருகு்கிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழந்து உள்ளனர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வராததால் தொழிலாளர்கள், விசைத்தறியாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது பாதிக்கப்படும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.