பெரம்பலூர்:
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் அலையை கட்டுப்படுத்தவும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கடந்த 6-ந்தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே ெபரம்பலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
முழு ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை திறக்க அனுமதி கிடையாது என்பதால், நேற்று அந்த கடைகளும், மற்ற கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள், கார்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர்.
உணவகங்களில் பார்சல் சேவை
அத்தியாவசிய தேவையான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் மற்றும் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் போன்றவை வழக்கம் போல் செயல்பட்டன.
உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது. அந்த நேரத்தில் மட்டும் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் இயங்கின. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. தூய்மை காவலர்கள் நேற்றும் வழக்கம்போல் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்கு
முழு ஊரடங்கையொட்டி பெரம்பலூர் மாவட்ட எல்லைகளிலும், பெரம்பலூர் நகர்ப்பகுதியிலும், முக்கியமான பகுதிகளிலும் போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இதனை போலீஸ் சூப்பிரண்டு கண்காணித்தார். அப்போது சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை முதலில் போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். பின்னர் அவ்வாறு சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும், அத்தியாவசிய பொருட்களுடன் சென்ற சரக்கு வாகனங்களையும் போலீசார் அனுமதித்தனர். உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களை அனுமதித்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களை, அதற்கான பத்திரிகையை காண்பித்த பிறகே போலீசார் அனுமதித்தனர். முழு ஊரடங்கு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை கடைபிடிக்கப்பட்டது. முன்னதாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொண்டதால் நேற்று கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மங்களமேடு
மங்களமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் துணை சூப்பிரண்டு சந்தியா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன. கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. லப்பைகுடிக்காடு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. லப்பைக்குடிக்காடு பஸ் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருமாந்துறை சுங்கச்சாவடியில் குறைந்த எண்ணிக்கையில் லாரிகள் மற்றும் கார்கள் சென்றன.
வேப்பந்தட்டை
வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அன்னமங்கலம், அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், வாலிகண்டபுரம், கை.களத்தூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெண்களுக்கு பிறந்த வீட்டு சீராக பொங்கல் பானை கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.