விபரீத தண்டனை கொடுக்கப்பட்ட சிறுமி சாவு

விபரீத தண்டனை கொடுக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தாள்.

Update: 2022-01-09 19:55 GMT
வேப்பந்தட்டை:

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-
சூடு வைத்தனர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு மகாலட்சுமி (வயது 10), விக்னேஷ் (7), சுப்புலெட்சுமி (3) என 3 குழந்தைகள் உண்டு. இதில் மகாலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மகாலட்சுமி கடந்த 6-ந் தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து ரூ.70-ஐ திருடிச்சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தாய் மணிமேகலையும், உறவினர் ஒருவரும் சேர்ந்து, திருடுவது தவறு என்பதை உணர்த்த நெருப்பில் மிளகாயைப் போட்டு அந்தப் புகையை சுவாசிக்குமாறு மகாலட்சுமியை அமுக்கி பிடித்ததாகவும், கால் மற்றும் வாய்ப்பகுதியில் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் துடிதுடித்த மகாலட்சுமி மயக்கமடைந்தார்.
சாவு
இதையடுத்து மகாலட்சுமியை அவரது பெற்றோர் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகாலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலை, உறவினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு தண்டனை கொடுத்து திருத்த வேண்டும் என்று நினைத்து எடுத்த முடிவு விபரீதத்தில் முடிந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்