வீடுகளில் மக்கள் முடக்கம்

முழு ஊரடங்கினால் விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் மக்கள் முடக்கினர்.

Update: 2022-01-09 19:36 GMT
விருதுநகர், 
கொ ரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்படி  முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 
வெறிச்சோடிய சாலை 
விருதுநகரில் பிரதான சாலைகள் அனைத்தும்  மக்கள் நடமாட்டம் இன்றி முழு அமைதியாக நிலவியது. வழிபாட்டுத்தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் டீக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. உணவகங்களில் மட்டும் அரசு விதிமுறைப்படி பார்சல் சேவை நடந்தது.
சில சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை போலீசார் நிறுத்தி அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களை விசாரித்து முக கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். சில இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பால், பத்திரிக்கை வினியோகம் தடை ஏதுமில்லாமல் நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். 
சிவகாசி
சிவகாசியில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் அதிகாலை முதல் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை.  இதேபோல் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக் கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. 
அதே போல் காய்கறி மார்க்கெட்டிலும் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதேபோல் இறைச்சி கடைகளும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டது. வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில்களில் பக்தர்கள் இன்றி வழக்கமாக பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் பார்சல்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. மருத்துவமனைகளும் திறந்து வைக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. நகரில் பரபரப்பாக காணப்படும் சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை சாலை பொதுமக் கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி, கூமாப்பட்டி செல்லும் சாலை, அழகாபுரி செல்லும் சாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் அறிவுைர வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 
ஆலங்குளம் 
ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ஓட்டல் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆலங்குளம் சப் -இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையில் சிறப்பு சப்- -இன்ஸ்பெக்டர்கள ஜோதிமணி, முருகேசன், மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அதேபோல சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், தளவாய்புரம், காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பரபரப்பான சாலைகள வெறிச்சோடி காணப்பட்டது. மொத்ததில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். 

மேலும் செய்திகள்