பல் மருத்துவக்கல்லூரி பணியை விரைந்து முடிக்க வேண்டும்

விருதுநகரில் முடங்கியுள்ள பல் மருத்துவக்கல்லூரி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-09 19:11 GMT
விருதுநகர், 
விருதுநகரில் முடங்கியுள்ள பல் மருத்துவக்கல்லூரி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
பல் மருத்துவக்கல்லூரி 
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதோடு அதற்காக முதல் கட்டமாக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதற்கிடையில் பொது மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்த நிலையில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் பணி முடங்கியது.
 இதனை தொடர்ந்து பொது மருத்துவக்கல்லூரிக்கு மத்திய,மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி முடிவடைந்து விட்ட நிலையில் பல் மருத்துவக்கல்லூரிக்கு இடம் கண்டறியும் பணி தொடங்கப்பட்டது.
அறிவிப்பு பலகை 
 சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையிலான சிறப்பு குழு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே பல் மருத்துவக்கல்லூரிக்கு 8 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மேலும் பல் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
 ஆனால் இதனையடுத்து பல் மருத்துவக்கல்லூரி தொடக்கப்பணிகள் முற்றிலுமாக முடங்கிவிட்டது. தற்போதைய நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலேயே பல் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி தற்போது உள்ள பொது மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் முதல் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கற்றல் பணியை தொடங்க அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது.
அவசியம் 
எனவே தமிழக அரசு விருதுநகரில் ஏற்கனவே அறிவித்தபடி பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணியை தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்த பின்பு பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணியை எவ்வித பிரச்சினையும் இல்லாத நிலையில் அதனை உடனடியாக பணிகளை தொடங்க வேண்டியது அவசியமாகும். 

மேலும் செய்திகள்