குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
நெல்லை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
குளத்தில் மூழ்கினார்
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் காதர் மைதீன். இவருடைய மகன் ரஹீம் (வயது 28). இவர் நேற்று காலை நெல்லை பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிக்கும் ஆலையில் எந்திரங்களை பொருத்தும் பணிக்காக தன்னுடன் வேலைபார்க்கும் 4 பேருடன் வந்திருந்தார்.
பின்னர் ரஹீம் உள்ளிட்ட 5 பேரும் பணிகளை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அனைவரும் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரஹீம் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
பிணமாக மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குளத்தில் இறங்கி ரஹீமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ரஹீமை பிணமாக மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.