குமரி எல்லையில் கேரள பஸ்கள் நிறுத்தம்

குமரியில் முழு ஊரடங்கால் கேரள பஸ்கள் அதன் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

Update: 2022-01-09 18:57 GMT
களியக்காவிளை
குமரியில் முழு ஊரடங்கால் கேரள பஸ்கள் அதன் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
முழு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதன்படி, குமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் காய்கறி சந்தை, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. இதனால் களியக்காவிளை பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடியது.
கேரள வாகனங்கள் நிறுத்தம்
அதேநேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று வழக்கம் போல் அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இயங்கின. எல்லையில் உள்ள கேரள பகுதியில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் வியாபாரம் பெரிய அளவில் நடைபெறவில்லை. 
கேரளாவில் இருந்து வந்த வாகனங்கள் குமரி எல்லையிேலயே நிறுத்தப்பட்டது. அதாவது இஞ்சிவிளையிலேயே பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அந்த பஸ்கள் களியக்காவிளை பஸ் நிலையம் வரை வந்து திரும்பி சென்றது. ஆனால் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் யாரையும் ஏற்றவில்லை. மாறாக இஞ்சிவிளையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றது. 
இதேபோல் கேரளாவில் இருந்து வந்த தனியார் வாகனங்கள் இஞ்சிவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதற்காக இஞ்சிவிளை பகுதியில் ஏராளமான போலீசார் சாலையில் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்