கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3,500 படுக்கைகள் தயார்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனைகளில் 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனைகளில் 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் பாபுராவ் தெருவில் உள்ள விடுதிகளில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் அங்கு செல்லாதவகையில் தகரம் அடிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று அந்த தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
3,500 படுக்கைகள் தயார்
பின்னர் கலெக்டர் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனைகளில் 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. லேசான பாதிப்பு காணப்படும் நபர்கள் டாக்டரின் பரிந்துரை பெற்று வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறலாம்.
வெளிமாநிலங்களில் இருந்து சாதாரண நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்களை தனியார் மருத்துவமனையிலும், விடுதிகளிலும் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வட்ட அளவிலும், கிராம அளவிலும் வழங்கும் படியும், அந்தந்த வட்டங்கள், ஒன்றியங்களில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின்போது தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வின்போது வேலூர் மாநகர் நலஅலவலர் மணிவண்ணன், தாசில்தார் செந்தில், இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.