கிராமிய இசை கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாட்டினால் கிராமிய இசை கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
முத்தூர்
திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய இசை கலைஞர்கள் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் கிராமிய இசை கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி கிராமிய இசை கலைஞர்கள் கூறியதாவது :-
கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாட்டினால் மேளதாளம், வாத்தியம், நாதஸ்வரம், வீணை, வயலின், தப்பட்டை, டிரம் செட் அடிப்பவர்கள், வாசிப்பவர்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், நாட்டுப்புற இன்னிசை கலைஞர்கள், தெருக்கூத்து கிராமிய இசை கலைஞர்கள், பலகுரல் பேச்சாளர்கள் மற்றும் ஒலி, ஒளி, ஜென்செட், பந்தல் சாமியானா, பர்னிச்சர் அமைப்பாளர்கள், சமையல் பாத்திரங்கள், ஸ்டேஜ், டெக்கரேசன், மணவறை அமைப்பாளர்கள் அனைவரும் தற்போது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து ஒலி, ஒளி அமைப்பாளர்கள், கிராமிய இசை கலைஞர்களுக்கு தமிழக அரசு கலை, இலக்கிய பண்பாட்டு துறை மூலம் உரிய நிவாரணம் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.