முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
உடுமலை
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பஸ்கள் ஓடவில்லை
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி உடுமலையில் பஸ்கள் ஓடவில்லை. உடுமலை கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள்46-ம், டவுன் பஸ்கள் 58-ம் என மொத்தம் 104பஸ்கள் உள்ளன.
இதில் வெளியூர் செல்லும் 9 பஸ்கள் ஸ்பேர் பஸ்கள் ஆகும். மீதி ரெகுலராக இயக்கப்படும் பஸ்களாகும். நேற்று முழு ஊரடங்கையொட்டி இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோன்று தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆங்காங்கு இருசக்கர வாகனங்கள் ஓடின. அவ்வப்போது லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் கார்கள் மட்டும் சென்று வந்தன.
கடைகள் அடைப்பு
உடுமலை ராஜேந்திரா சாலையில், நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரிசந்தை மற்றும் காய்கறி கமிஷன் மண்டிகள் பூட்டப்பட்டிருந்தது. கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மருந்து கடைகள் திறந்திருந்தன. உடுமலையில், ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ராஜேந்திரா சாலையில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிகடைகள், மீன்கடைகள் வரிசையாக உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இந்த கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று முழு ஊரடங்கையொட்டி இந்த இறைச்சிக்கடைகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. பஸ்கள் ஓடாதது, கடைகள் மூடப்பட்டிருந்தது ஆகியவற்றால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சாலைகள் வெறிச்சோடின
இதுபோல் மடத்துக்குளம் பகுதியில் உள்ள கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதி, மடத்துக்குளம் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள இறைச்சிக்கடைகள், மடத்துக்குளம் நால்ரோடு பகுதியிலுள்ள தள்ளுவண்டி கடைகள், பேக்கரிகள் மூடப்பட்டிருந்தன. மடத்துக்குளம் பகுதியில் உள்ள மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் திறந்திருந்தன. பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையம், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் சரக்கு லாரிகள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஒன்றிரண்டு மட்டும் அவ்வப்போது சென்றன. ஒரு சில இருசக்கர வாகனங்கள் சென்றன. கணியூர், காரத்தொழுவு, கடத்தூர், குமரலிங்கம், கொழுமம், சாமராயபட்டி, பெருமாள் புதூர் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. குமரலிங்கம் சோதனைசாவடி, மடத்துக்குளம் சோதனைசாவடி மற்றும் கடத்தூர் சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குமரலிங்கம், கொழுமம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆங்காங்கே சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
குண்டடம்
குண்டடம், மேட்டுக்கடை, நால்ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வாகனபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறுசோடி கிடந்தது.
குடிமங்கலம்
இதுபோல் குடிமங்கலம் பகுதியில் கொரோனா பரவல் காரணமாக நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே சென்றன. இதனால் போக்குவரத்து இன்றி மாநில நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதி உள்பட பல்வேறு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.