திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டன
கொரோனா முழு ஊரடங்கையொட்டி திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள்-கடைகள் அடைக்கப்பட்டதுடன், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அனுப்பர்பாளையம்
கொரோனா முழு ஊரடங்கையொட்டி திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள்-கடைகள் அடைக்கப்பட்டதுடன், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரிப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை என்று தனது கோர தாண்டவத்தை வெளிப்படுத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினார்கள். இந்த நிலையில் தற்போது 3-வது அலையாக கொரோனா தொற்று ஒமைக்ரான் வடிவத்தில் பரவி வருகிறது. புதிய வகையான இந்த வைரசால் உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாத இறுதியில் திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது.
ஊரடங்கு
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதேபோல் கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கையும் அரசு அறிவித்தது.
முழு ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் தொழில் நகரமான திருப்பூர் நேற்று அமைதியுடன் காணப்பட்டது. பால் கடைகள், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும், மருத்துவமனைகளும், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன. மாநகரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த தொழில், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் தொழிலாளர்களும், பொதுமக்களும் வீடுகளிலேயே நேற்று முழுவதும் பொழுதை கழித்தனர்.
சாலைகள் வெறிச்சோடின
எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும் குமரன் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, ரெயில் நிலைய மேம்பாலம், புஷ்பா சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பழைய, புதிய பஸ் நிலையங்களில் பஸ்கள் இல்லாததால் வெறிச்சோடி இருந்தது.
திருப்பூரின் முக்கிய சந்திப்புகளில் மாநகர போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். திருமணத்திற்கு சென்றவர்கள் அதற்கான அழைப்பிதழையும், துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் அதற்கான உரிய சான்றையும், தேர்வுகளுக்கு செல்பவர்கள் ஹால் டிக்கெட்டுகளையும் போலீசாரிடம் காண்பித்து சென்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
ஓட்டல்களில் காலை முதல் இரவு வரை பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி சென்றவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைபயிற்சி மேற்கொண்டனர். பழனி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களை போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்ததால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கிறிஸ்தவ ஆலயங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ஊரடங்கை மீறி இறைச்சிக் கடைகள் திறந்துள்ளதா? என்று மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ஒருசில இடங்களில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இதேபோல் பழைய பஸ் நிலையம் அருகே டீ கேனில் வைத்து டீ விற்பனை செய்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக மாலை 5 மணி வரை வீடுகளுக்குள்ளேயே முடங்கிய பொதுமக்கள் அதன் பின்னர் கொஞ்சம் வெளியே வரத்தொடங்கினர். இதனால் மாலை 5 மணிக்கு பிறகு சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது.